பொங்கல் சாம்பார்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
துவரம் பருப்பு - 1/4 கப்
பெருங்காயம் - சிறிய சுண்டைக்காய் அளவு
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
கடுகு - 3/4 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டிலும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக 15 நிமிடம் ஊற வைக்கவும்.
கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டிரண்டாக நறுக்கவும்.
புளியுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பெருங்காயம், கத்தரிக்காய் மூன்றையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் தக்காளியை போட்டு ஊற வைத்த துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஊற வைத்த தண்ணீருடன் ஊற்றவும். மேலும் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
10 நிமிடம் கழித்து குக்கரை இறக்கி மூடியை திறந்து புளிக்கரைசலை ஊற்றி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த கலவையுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து விடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் கொதிக்க வைத்த சாம்பாரை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.