தக்காளி சாம்பார் (1)
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 75 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 3 பெரியது
பச்சைமிளகாய் - 3
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், சாம்பார் தூள், கொத்தமல்லி எல்லாவற்றையும் போடவும்.
பின்பு தேவையான அளவு நீர் விட்டு குக்கரை மூடி 4 விசில் விடவும் (விசிலின் எண்ணிக்கை குக்கரை பொறுத்து மாறுபடும் அதனால் பருப்பு கரையும் வரை விடவும்)
மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.
பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கரண்டியால் நன்கு பருப்பு, தக்காளியை மசித்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த விழுதை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும் அல்லது குக்கரை மூடி 1 விசில் விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
தாளித்ததை சாம்பாரில் கொட்டவும்.
இப்போது எளிதில் செய்ய கூடிய தக்காளி சாம்பார் தயார்.