சுண்டைக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் - 1/2 கப்
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
புளி - சிறிது எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லி விதை - 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்புடன் மஞ்சள் பொடி போட்டு தேவையான அளவு நீர் விட்டு குக்கரில் வேகவிடவும்.
மல்லி விதை, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம் இவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
உப்பு, புளி, வெல்லம் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற விடவும்.
சுண்டைக்காய்களின் காம்பைக் கிள்ளி, நசுக்கி அதன் விதைகளை நீக்கி விடவும். நசுக்கிய காய்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றி கையால் பிசைந்து விதைகள் போகும் படி கழுவவும்.
விதைகள் எல்லாம் போன பின் அந்த சுண்டைக்காய்களை வடிகட்டியில் போட்டு வைத்தால் தண்ணீர் எல்லாம் வடிந்து விடும்.
ஒரு வாணலியில் தனியா, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம் இவற்றை சிவக்க வறுத்து சற்று ஆறியபின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் விடவும். நெய் உருகியவுடன் கடுகைப் போடவும்.
கடுகு வெடித்தபின் வடிய வைத்துள்ள சுண்டைக்காயகளை அதில் போட்டு நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக வதங்கி காய்கள் வெள்ளை நிறமாக மாறும்போது வேகவைத்துள்ள பருப்பை கரண்டியால் நன்றாக மசித்து அதில் விடவேண்டும்.
சிறிது நேரம் கழித்து பருப்பும் காயும் நன்றாக குழைந்து வரும் போது ஊற வைத்துள்ள உப்பு, புளி, வெல்லம் இவற்றை நன்றாகக் கரைத்து சாம்பாரில் கொட்டவும்.
சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியை சேர்த்து கலக்கி வேக விடவும்.
கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். நன்றாக கொதித்து பொங்கி வரும் சமயம் இறக்கி பரிமாறவும்.