கொத்து பருப்பு சாம்பார்
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கத்திரிக்காய் - 1
கேரட், முட்டைகோஸ் - சிறிதளவு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு தாராளமாக தண்ணீர் விட்டு மஞ்சள் பொடியை அதில் சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நன்கு அலசி விட்டு நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். முட்டை கோஸ், கேரட்டையும் அரிந்து கொள்ளவும்.
பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்த பருப்பில் பாதியை இரண்டரை டம்ளர் தண்ணீருடன் கலந்து கொண்டு அதில் அரிந்த வெங்காயத்தில் முக்கால்வாசியும், மற்ற காய்களையும் ( பூண்டை தவிர்த்து) சேர்த்து மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
ஓரளவு வெந்ததும் மீதி உள்ள பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி விட்டு, வேறு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், மீதி உள்ள வெங்காயம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் அரை தேக்கரண்டி மிளகாய்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு சாம்பாரை அதில் ஊற்றவும். மல்லி தழையை நறுக்கி தூவி ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
சுவையான கொத்து பருப்பு சாம்பார் தயார்.
குறிப்புகள்:
உருளைக்கிழங்கும், முருங்கைக்காய், மாங்காவும் கூட சிறிதாக அரிந்து சேர்க்கலாம்.
முட்டை சாப்பிடுபவர்கள் இருந்தால் தாளிக்கும் போது மிளகாய்தூள் எல்லாம் போட்ட பிறகு முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி லேசாக கிளறி விட்டு பின்பு சாம்பாரை ஊற்றவும். இது ஒரு விதம்.
ஸ்பெஷலாக செய்வதாக இருந்தால் நிறைய சின்ன வெங்காயம் மட்டும் சேர்த்து காய்கள் இல்லாமல் கடைசியில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து இறக்குவோம்.
தாளித்த பின் முட்டையை மெதுவாக ஊற்றி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு இறக்கலாம்.
இது சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவற்றிற்கு ஏற்றதாக இருக்கும்