கலவை சாம்பார்
தேவையான பொருட்கள்:
கலப்பு காய்கள் எல்லாம் சேர்த்து - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
கடலைப் பருப்பு - 3/4 தேக்கரண்டி
உளுந்து - 3/4 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
பெருங்காயம் - பட்டாணி அளவு
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின காய்களுடன் துவரம் பருப்பை சேர்த்து போதிய தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடலைப் பருப்பு, உளுந்து, மிளகாய், மல்லி, வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாய் போட்டு வறுத்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
இரண்டு வெங்காயத்தை நறுக்கி எண்ணெய்யில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலையும் வதக்கி எடுக்கவும்.
வறுத்து எடுத்த எல்லா பொருட்களையும் அம்மியில் வைத்து அரைக்கவும். மீதமுள்ள ஒரு வெங்காயத்தை வதக்காமல் போட்டுத் தட்டியெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து வடிகட்டி ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய தக்காளிகள் ஆகியவற்றையும் சேர்த்து வேகவிடவும்.
ஒரு கொதி வந்ததும் வேகவைத்த காய்கறிகளைப் போட்டுப் பச்சை மிளகாய்களையும் நறுக்கிப் போடவும்.
நன்றாகக் கொதித்ததும் கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டுப் பாத்திரத்தை இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து சாம்பாரை அதில் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.