கடலை மாவு சட்னி
தேவையான பொருட்கள்:
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 8 (அல்லது) 9
பொட்டுக்கடலை - 1 1/2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காயுடன் பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சட்னியாக அரைக்கவும். அதனுடன் கடலை மாவைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கவும் (அல்லது) உதிர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் (அல்லது) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் சட்னியை நீர்க்கக் கரைத்து ஊற்றவும். கடலை மாவு சேர்த்திருப்பதால் அடிபிடிக்காமல் இருக்க உடனேயே நன்கு கிளறிவிடவும். (அடிக்கடி கிளறிவிடவும்).
கடலை மாவின் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். சட்னி கொதித்து கெட்டியாகத் துவங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான கடலை மாவு சட்னி தயார்.
குறிப்புகள்:
சப்பாத்தி, பூரிக்குப் பொருத்தமான சிம்பிளான சைட் டிஷ் இது.