வெஜிடபிள் குருமா (2)
தேவையான பொருட்கள்:
பட்டாணி - 200 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
காலிஃப்ளவர் - 100 கிராம்
உருளைக் கிழங்கு - 200 கிராம்
காரட் - 200 கிராம்
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 6
கசகசா - 1/2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
பட்டை - ஒரு அங்குல துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட், காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்ஸியில் இட்டு நன்கு மைபோல அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கசகசா, முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனியே அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் போடவும்.
வெங்காயம் சிவந்ததும், அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையைப் போட்டு வாசனை வரும் வரை கிளற வேண்டும்.
பிறகு காய்கறிகளைப் போட்டு, தேங்காய் பாலையும் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
கால் மணி நேரம் கழித்து, காய்கறி வெந்தவுடன் கசகசா, பொட்டுக்கடலை மசாலாவினை போட்டு குருமா கெட்டியானவுடன், சிறிது நேரம் சிறு தீயில் வைத்திருந்து பிறகு இறக்கி பரிமாறவும்.
இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும்.