வாத்துக்கறி குருமா
தேவையான பொருட்கள்:
வாத்துக்கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
பாதாம் பருப்பு அல்லது முந்திரி - 8
மல்லித் தழை, புதினா - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாத்துக்கறியை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிது நேரம் ஊறவிடவும். பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரித்து தேங்காயுடன் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.
பிறகு வாத்துக்கறி, தயிர், உப்பு சேர்த்து ஒரு கப் நீர் ஊற்றி அரை மணி நேரம் சிறு தீயில் வைத்து வேகவிடவும்.
அதில் தேங்காய், பாதாம் பருப்பு விழுது சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.