பரோட்டா சிக்கன் குருமா
தேவையான பொருட்கள்:
கறி - 1/4 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தேங்காய் விழுது - 1/4 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறி மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
அதிகம் எலும்பில்லாத இறைச்சியாக எடுத்து, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஆட்டிறைச்சி என்றால் சிலர் எலும்புக் கறியாக சேர்த்துக் கொள்வர். விருப்பத்திற்கேற்றார்போல் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், கீறின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறிவிடவும்.
பிறகு அதில் சிக்கனைப் போட்டு பிரட்டி விடவும்.
இப்போது அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.
அதிலேயே கறி மசாலா, மல்லித் தூள், உப்பு போட்டு கலக்கி விடவும். இதனை சிறிது நேரம் வேகவிடவும்.
3 நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி விடவும்.
குக்கரில் வெயிட் போட்டு இரண்டு விசில் வரை வேகவிடவும். கறி வெந்தது பார்த்து இறக்கி சூடாக பரோட்டாவுடன் பரிமாறவும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.