க்ரீமி பனீர் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 3

உருளைக்கிழங்கு - 1

குடைமிளகாய் - பாதி

மல்லித் தூள் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

முந்திரி - 10

வெந்தயக் கீரை - ஒரு கைப்பிடி அளவு

பால் - 1 கப்

ஃப்ரெஷ் க்ரீம் - 1 தேக்கரண்டி

நெய் - சிறிது

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தைத் தோல் நீக்கிவிட்டு, நடுப்பகுதியில் நான்கு பாகமாக வரும்படி வெட்டி வைக்கவும். (துண்டுகளாக்கத் தேவையில்லை).

ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதிக்கத் துவங்கியதும் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கொதித்தவுடனேயே வெங்காயத்தை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).

பனீரை நறுக்கி சிறிது நெய் விட்டு வறுத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நசுக்கிச் சேர்த்து மேலும் சில நிமிடம் வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் சேர்த்துப் பிரட்டவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, மசாலா வாசம் போகக் கிளறவும். அதிலேயே உருளைக்கிழங்கு வெந்துவிடும்.

பிறகு முந்திரியை பாலில் ஊற வைத்து அரைத்துச் சேர்க்கவும். மீதமுள்ள பாலையும் சேர்த்துச் சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும்.

10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, வறுத்த பனீர் மற்றும் க்ரீம் சேர்க்கவும்.

பிறகு வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

ரொட்டிக்கு பக்க உணவாக சாப்பிட அருமையாக இருக்கும்.