கோழி குருமா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி கறி - 1/2 கிலோ

வெங்காயம் - 2 கைப்பிடி

பூண்டு - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப

பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

நறுக்கிய தக்காளி - ஒரு கைப்பிடி அல்லது 1 அல்லது 2 பழம்

தயிர் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

கரம் மசாலா தூள் - தேவையான அளவு

எலுமிச்சை (சிறியது) - 1 பழம்

பட்டை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். கொத்தமல்லி புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிவப்பாக மாறும் வரை தாளிக்கவும். ஆனால் கருகவிடக் கூடாது.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு தடவை வதக்கி தக்காளி மற்றும் கோழி கறி சேர்த்து ஒரு தடவை கிளறவும்.

பிறகு தூள் வகைகள், தயிர், உப்பு சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும்.

எண்ணெய் பிரிய தொடங்கியதும்,உருளைக்கிழங்கு சேர்த்து 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.(கோழி கறி என்பதால் சீக்கிரம் வெந்துவிடும்)

கறி வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். தேவைப்பட்டால் அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கலாம்.

தேங்காய் விழுது, சிறிதளவு கரம் மசாலா சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடலாம் அல்லது மேலும் ஒரு விசில் விடலாம்.

குறிப்புகள்:

இது பரோட்டா, குஸ்காவுடன் சுவையாக இருக்கும், வெள்ளை சாதத்திற்கும் நல்லதொரு காம்பினேஷன்.

தேவையானால் தேங்காய் விழுதுடன் முந்திரி, கசகசா சேர்த்தும் அரைக்கலாம்.