காளான் குருமா (1)
தேவையான பொருட்கள்:
காளான் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 10
தக்காளி - 3
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
பட்டை - 6 துண்டு
கிராம்பு - 2
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - பாதி
தேங்காய் - ஒரு மூடி
புதினா - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி
மிளகாய்தூள் - 1/2 கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 1/4 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காளானை அடி காம்பு நீக்கி இரண்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் மூடியை கழுவி பூவாக துருவி வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய், முந்திரி, பொட்டுக்கடலை இவற்றை மிக்ஸியில் இட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 2 கரண்டி எண்ணெய் விட்டு காளானை வேகும் வரை சிவக்க வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் இவற்றைப் போட்டு பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். வெங்காயம் சிவந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை கழுவி மீண்டும் அடுப்பில் வைத்து 4 கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, கிராம்பு, சோம்பு, சீரகம் விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், புதினா, கறிவேப்பிலை, அஜினமோட்டோ, நறுக்கி வைத்துள்ள தக்காளி, வதக்கிய வெங்காயம் சேர்த்து மேலும் வதக்கி அரை லிட்டர் தண்ணீர் விட்டு 7 அல்லது 10 நிமிடம் வேகவைக்கவும்.
பின்பு வதக்கி வைத்துள்ள காளானை இவற்றுடன் சேர்த்து கொதி வந்ததும் தேங்காய், முந்திரி, பொட்டுக்கடலை இவற்றின் விழுதை கால் கப் தண்ணீரில் கரைத்து அத்துடன் சேர்த்து மூடி சுமார் 7 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் மீதமுள்ள புதினா, மல்லித்தழை நறுக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு இறக்கி பரிமாறவும்.