காய்கறி குருமா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு - 2

பீன்ஸ் - 6 அல்லது 7

கேரட் - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தனியா தூள் - 1 தேக்கரண்டி

புளி - கொட்டை பாக்கு அளவு

கடுகு - தாளிக்க

கறிவேப்பிலை - தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வதக்கி அரைக்க:

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 3 அல்லது 4 பல்

இஞ்சி - ஒரு துண்டு

கொத்த மல்லி - ஒரு கைப் பிடி

சோம்பு - 1 தேக்கரண்டி

பட்டை - ஒரு சிறுத் துண்டு

லவங்கம் - 3 அல்லது 4

துருவிய தேங்காய் - ஒரு கைப் பிடி

பொட்டு கடலை - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

காய்களை கழுவி தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.

வேண்டுமென்றால் பட்டாணி, மீல் மேக்கர் கூட சேர்த்து கொள்ளலாம்.

வதக்க தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் போட்டு தாளித்து கொள்ளவும்.

வேண்டுமென்றால் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளலாம். பின், அதனுடன் காய்கறிகளை சேர்க்கவும்.

காய்கறிகளுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

காய்கறி கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

மற்றொரு கடாயில் வதக்க தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியவுடன் ஆற வைத்து, மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

காய்கள் நன்கு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்க்கவும்.

பின் இதனுடன் கரைத்து வைத்துள்ள புளி சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம்.

மேலே சிறிது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குருமா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.