உடைத்துவிட்ட முட்டை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய்ப் பால் - 1 கப்

கொத்தமல்லித் தழை - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு முட்டையை மட்டும் உடைத்து தனியாக அடித்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும்.

அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கியதும் தீயைக் குறைத்துவிட்டு தேங்காய்ப் பால் ஊற்றி மூடியிடாமல் பாத்திரத்தை திறந்து வைத்து 5 நிமிடங்கள் சூடாக்கவும். சூடானதும் முட்டைகளை ஒவ்வொன்றாக கவனமாக உடைத்து ஊற்றவும்.

அனைத்து முட்டைகளையும் ஊற்றிய பிறகு தனியாக அடித்து வைத்துள்ள முட்டையை குழம்பு முழுவதிலும் பரவலாக ஊற்றவும். (முட்டையை ஊற்றிய பிறகு கரண்டியால் கலந்து விடக்கூடாது. அவ்வாறு கலந்தால முட்டைகள் கலங்கிப் போய் பிரிந்துவிடும்).

அடுப்பை 10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்திருந்து முட்டை வெந்ததை சரிபார்த்து இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம்.

ப்ளைன் சாதம், புலாவ் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

இந்த குருமாவில் முட்டையின் பச்சை வாசனை தெரியவே தெரியாது.