வாழைப்பூ வடை (10)
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 3/4 கப்
மிளகாய் வற்றல் - 5
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை உரித்து உள்ளே உள்ள நரம்பு மற்றும் ஜவ்வு போன்ற பகுதியை எடுத்து விட்டு அப்படியே கொத்தாக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின வாழைப்பூவை தண்ணீரில் போட்டு, சிறிது மோர் உற்றி அலசி கொள்ளவும். கடலைப் பருப்பை தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், பெருஞ்சீரகம் போட்டு ஒரு முறை பொடியாக அரைத்து கொள்ளவும். கடலை பருப்பை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மையாக அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைக்கவும். அதை போல் வாழைப்பூவையும் தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த வாழைப்பூவில் தண்ணீர் நிறைய இருந்தால் வடிகட்டிவிட்டு, பிழிந்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பூ, அரைத்த கடலைப்பருப்பு, நறுக்கின வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் போடவும்.
அத்துடன் உப்பு மற்றும் மிளகாய் பெருஞ்சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை சிறு உருண்டையாக உருட்டி கையில் வைத்து வடையாகத் தட்டிக் கொள்ளவும். ரொம்பவும் கனமாக தட்டினால் வேக நேரமாகும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாணலியின் அளவைப் பொறுத்து, ஒரு தடவைக்கு மூன்று அல்லது நான்கு வடைகளைத் தட்டிப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.