வாழைப்பூ வடை
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 5
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
புதினா - 5 இலைகள்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப் பூவை மோர் கலந்த தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும். கடலைப்பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஊறிய கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு மற்றும் சோம்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். அதனுடன் வாழைப் பூவைச் சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். அரைத்தவற்றுடன் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சிறிய வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், 4 அல்லது 5 வடைகளைப் போட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.