ரெடிமேட் வடை
தேவையான பொருட்கள்:
வடை மாவு - 1 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/4 இஞ்ச்
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - 3/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
உப்பு - முக்கால் தேக்கரண்டி
வடை மாவு செய்ய:
உளுந்து - 1 கிலோ
புழுங்கல் அரிசி - 1 கப்
செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தை வெயிலில் உலர்த்தி எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். மாவை அரைக்கும் போது நைசாக அரைத்து விட கூடாது. சற்று கொரகொரப்பாகவே அரைக்க வேண்டும்.
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதை போல பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு பொடி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறி கொள்ளவும்.
அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி வடை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவை கரைத்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் மாவு ஊறியதும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு எடுத்து நடுவில் ஒரு சிறிய ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.
3 அல்லது 4 நிமிடம் கழித்து திருப்பி போட்டு சற்று சிவந்ததும் 3 நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும்.