மெது வடை
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு கிராம்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
பிறகு பருப்பைக் களைந்து தண்ணீரை நன்றாக வடித்து கல் உரல் அல்லது கிரைண்டரில் போட்டு கெட்டியாகவும் மை போன்றும் அரைத்துக் கொள்ளவும்.
கடைசியில் உப்பு, பெருங்காயத்தைப் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் போடுங்கள். கறிவேப்பிலையை சிறுசிறு துண்டுகளாகக் கிள்ளிப் போட்டு மாவைக் கலந்து கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.
டபரா அல்லது அடிபாகம் தட்டையாகவுள்ள ஒரு பாத்திரத்தைக் கவிழ்த்துப் போடுங்கள். கையகல சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்துத் தண்ணீரில் நனைத்து பாத்திரத்தின் மீது பிரித்து போடுங்கள்.
மாவை நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் விரல்களை நனைத்து மாவை எலுமிச்சங்காய் அளவு எடுத்து பிரித்துப் போட்டுள்ள துணியின் மீது வைத்து வட்டமாகத் தட்டுங்கள்.
எண்ணெய் நன்றாகக் காய்ந்து புகை வந்ததும் வடையை எடுத்து அதில் போடுங்கள். எச்சரிக்கையாக மாவை எண்ணெயில் போட வேண்டும்.
கையைத் தண்ணீரில் நனைக்காமல் மாவை எடுத்தால் அது கையை விட்டு வராது. அதே சமயம் எண்ணெயில் போடும் போது தடால் என்று போட்டால் சூடான எண்ணெய் உங்கள் மீது தெறிக்கும் அபாயமும் உண்டு.
வடை ஒரு பக்கம் சிவந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறு பக்கமும் சிவந்து வந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும்.