மெதுவடை
தேவையான பொருட்கள்:
உளுந்து - 1/4 கிலோ
புழுங்கல் அரிசி - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
சோம்பு - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப்
மல்லித்தழை - 1 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரிலோ அல்லது மிக்ஸியிலோ நன்கு கெட்டியாக அரைக்கவும். அரிசியை நன்கு ஊற வைத்து பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து ரவை பதத்துக்கு கொர கொரவென்று கெட்டியாக அரைக்கவும். (விருப்பப்பட்டால் ஒரு துண்டு இஞ்சி சேர்த்தும் அரைக்கலாம்)
இரண்டு மாவையும் ஒன்று சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து வடையாக தட்டி போட்டு திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.