புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1
உருளைக்கிழங்கு - 2
மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி + 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 5
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி + 2 சிட்டிகை
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எலுமிச்சை பழம் - ஒரு மூடி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + 1 கப்
உப்பு - 1 1/4 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
செய்முறை:
புடலங்காயை ஒன்றரை அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய புடலங்காயை ஒரு தட்டில் போட்டு இட்லி பானையில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் எடுத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். புடலங்காய் வெந்ததும் எடுத்து நடுவில் உள்ள விதைகளை நீக்கி விடவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் அரை மேசைக்கரண்டி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி பெருங்காயத் தூள், 1 1/4 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
பிறகு 2 நிமிடம் நன்கு கிளறி மேலே எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கிளறி இறக்கி விடவும்.
நறுக்கின புடலங்காய் துண்டங்கள் அனைத்திலும் தயார் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை வைத்து நிரப்பிக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, 2 சிட்டிகை பெருங்காயத் தூள், சோடா உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். மசாலா நிரப்பிய புடலங்காய் துண்டங்களை ஒவ்வொன்றாய் எடுத்து, கரைத்து வைத்திருக்கும் மாவில் இரண்டு ஓரங்களையும் தோய்க்கவும்.
வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்து எடுத்த புடலங்காயை எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் அடங்கியதும் எடுத்து பரிமாறவும்.