நாகூர் வாடா
தேவையான பொருட்கள்:
ஆற்று இறால் - 50 கிராம்
பச்சரிசி - 2 கப்
ரவை - அரை கப்
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் (பெரியது) - 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ரவை போல் அரைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த மாவிலிருந்து அரை கப் எடுத்து அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கஞ்சி போல் காய்ச்சி ஆற விடவும். (இதை கப்பி காய்ச்சுவது என்பார்கள்).
கஞ்சி நன்கு ஆறியதும் அதை மீதமுள்ள மாவில் ஊற்றி ரவை, சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர கெட்டியாக பிசைந்து, இரவு முழுவதும் வைத்து புளிக்க விடவும். மறுநாள் புளித்து உப்பி இருக்கும்.
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் (மேல் தோல் உரிக்க வேண்டாம்). பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உப்பு போட்டு வாசனை வரும் வரை இறாலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
ஒரு ப்ளாஸ்டிக் பை (அல்லது) காட்டன் துணியை வைத்து அதில் சிறு உருண்டை மாவை எடுத்து வட்டமாக தட்டி, அதன் மேல் அரை தேக்கரண்டி அளவு வறுத்த வெங்காயத்தை பரப்பி வைக்கவும்.
அதன் மீது மேலும் மாவை வைத்து வடை போல் தண்ணீரை தொட்டு தட்டவும். தண்ணீர் தொட்டு தட்டினால் ஒட்டாமல் வரும்.
உளுந்து வடை போல் நடுவில் ஓட்டை போட்டு மேலே இறாலை வைத்து பதிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வாடாவை போட்டு, இருபக்கமும் வேகுமளவு திருப்பிப் போட்டு பொரிக்கவும். பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறவும்.