தேங்காய் முறுக்கு
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
எள்ளு - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
பிறகு எடுத்து கழுவி சுத்தம் செய்து கிரைண்டரில் அரிசி, தேங்காய் இரண்டையும் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைக்கும் போது அரிசி இல்லாமல் நைசாக அரைக்கவும். அரிசி இருந்தால் எண்ணெயில் பிழியும் போது வெடிக்கும்.
பொட்டுக்கடலையை பொடி செய்து சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொட்டுக்கடலைப் பொடி, எள்ளு, உப்பு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்று சேர நன்கு பிசைந்து கொள்ளவும். மாவில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருந்தால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். அடுப்பின் தீ சீராக இருக்க வேண்டும். மிதமாக இருந்தால் நல்லது.
முறுக்கு உரலில் நட்சத்திர அச்சை போட்டு உரலின் உள்ளே சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை உரல் கொள்ளும் அளவு எடுத்துக் கொள்ளவும். பிறகு ப்ளாஸ்டிக் கவரை தேவையான அளவு சதுரமாக வெட்டி தட்டில் வைத்து அதில் முறுக்கை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் பிழிந்த முறுக்கை ஒவ்வொன்றாக எடுத்து எச்சரிக்கையுடன் போடவும். எண்ணெய் பொங்குவது போல் நுரைத்து கொதிக்கும்.
சுமார் 2 நிமிடம் கழித்து எண்ணெய் கொதிப்பது அடங்கிவிடும். இதனைக் கொண்டு முறுக்கு வெந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
அனைத்து முறுக்குகளையும் திருப்பி போட்டு, பொன்னிறமாக சிவந்து, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.