தவலடை (2)
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 100 கிராம்
புழுங்கலரிசி - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
துவரை பருப்பு - 100 கிராம்
உளுந்து - 100 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
வரமிளகாய் - 5
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 10 கிராம்
தேங்காய் துருவல் - 5 மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - மூன்று கொத்து
ஆய்ந்த மல்லி இலை - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இரு வகை அரிசிகளையும், பாசிப் பருப்பில் இருபது கிராம் மட்டும் தனியாக ஊறப் போட்டு விட்டு மற்ற பருப்பு வகைகளையும், வர மிளகாயையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி, பச்சை மிளகாயை பொடியாக வெட்டி வைக்கவும்.
முந்திரிப் பருப்பை பொடியாக கிள்ளி வைக்கவும்.
ஊற வைத்தவற்றை பெருங்காயம், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வழித்து வைத்து அதில் தனியாக ஊற வைத்த பாசிப் பருப்பை கழுவி போடவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து தாளிக்கவும்.
வெடித்ததும் முந்திரிப் பருப்பை போடவும். சிவந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
அடுப்பை நிறுத்தி விட்டு மல்லி இலை சேர்க்கவும்.
இந்தக் கலவையை மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.
இப்போது அடுப்பில் அடி தட்டையான வானலியை (தவி) வைத்து எண்ணையை ஊற்றவும்.
எண்ணை சூடானதும் மாவில் ஒரு கரண்டி வைத்து நடுவில் லேசாக அழுத்தவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.