தயிர் வடை (2)
தேவையான பொருட்கள்:
உளுந்து - 1 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தயிரில் சேர்ப்பதற்கு:
கெட்டி தயிர் - 1 கப்
இஞ்சி (பொடிதாக துருவியது) - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1
சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 4
அலங்கரிக்க:
பூந்தி - 1/4 கப்
பொடியாக நறுக்கிய மல்லி இலை - 1 தேக்கரண்டி
கேரட் துருவல் - 1 தேக்கரண்டி
செய்முறை:
உளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறிய உளுந்தினை நன்கு மை போல கெட்டியாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
எண்ணெயை காயவைத்து உளுந்து வடைக்கு தட்டுவது போல் கையை தண்ணீரில் நனைத்து மாவை எடுத்து ஆள் காட்டி விரலாலும் கட்டை விரலாலும் நடுவில் ஒரு குழி இட்டு அப்படியே காய வைத்த எண்ணெயில் போட்டு பொரித்து வைக்கவும்.
2 கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து பின் பொரித்த வடைகளை அதில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் பிழிந்து எடுக்கவும்.
தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து கலந்து அதில் பிழிந்து எடுத்த வடையை போட்டு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். பரிமாறும்பொழுது அதன் மேல் பூந்தி, கேரட் துருவல், மல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.