டூனா மீன் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டூனா மீன் டின் - 300 கிராம்

வெங்காயம் (பெரியது) - ஒன்று

பச்சை மிளகாய் - 6

சோம்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 கப்

கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டூனா மீனை உதிர்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

உதிர்த்து வைத்துள்ள டூனா மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அத்துடன் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து கொள்ளவும்).

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை வடைகளாகத் தட்டி போட்டு வெந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்:

டூனா மீனில் உப்பு இருப்பதால் பருப்புக் கலவை அரைக்கும் போது சிறிதளவு உப்புச் சேர்த்தால் போதும்.

டின் மீன் கிடைக்கவில்லையெனில் நன்கு சதையுள்ள மீனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்துச் செய்யலாம்.