டூனா சமோசா
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கோப்பை
டூனா பிஷ் கேன்கள் - 2 (75 கிராம்)
வெங்காயம் - 2
புதினா - 1/4 கட்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
எலுமிச்சை - 1/2 மூடி
தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து மண் போக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். டூனா பிஷ்ஷை கேன்களில் இருந்து தனியே எடுத்து அதில் இருக்கும் எண்ணெயை பிழிந்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து தனியே வைக்கவும்.
அடுப்பில் நாண் ஸ்டிக் பானை வைத்து சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டு பொரிய விடவும்.
கடுகு பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
2 நிமிட இடைவெளியில் புதினாவை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உதிர்த்து வைத்த டூனா பிஷ்ஷை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு இதனுடன் மசாலா தூள்களையும், உப்பையும் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட்டு 5 நிமிடங்கள் மசாலா வாடை போக மூடி வைக்கவும். பிறகு திறந்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து கிளறி இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மைதாவை சிறு சிறு உருண்டைகளாக்கி அதை வட்ட வடிவில் தேய்த்து பாதியாக கட் செய்து, அதில் அரைவட்டத்தில் டூனா கலவையை வைத்து சமோசாவிற்கு மடிப்பதை போல மடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த சமோசாக்களை மூன்று மூன்றாக போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
குறிப்புகள்:
டூனா பிஷ் எண்ணெயிலேயே பதப்படுத்தப்பட்டு வருவதால் இதற்கு அதிக எண்ணெய் சேர்க்க கூடாது.
உப்பும் மிகவும் குறைவாக தான் சேர்க்க வேண்டும்.