சீடை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
உருட்டு உளுந்து - 1/2 கப்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எள் - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - 1/4 தேக்கரண்டி
ரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்ணெய் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசிய்ம்.
உளுத்தம் பருப்பை நன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும்.
பச்சரிசி மாவை இரண்டு முறை சலித்து வைக்கவும்.
வறுத்த உளுந்து நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டு நைசாகத் திரித்தெடுத்து, இரண்டு முறை சலித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அத்துடன் உளுந்து மாவு, எள், உப்பு, வெண்ணெய், பெருங்காயப் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
பிசைந்த மாவு மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்குமாறு பார்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக (சீடைகளாக) உருட்டவும். (உருட்டும் போது அதிகமாக அழுத்தி உருட்டாமல், லேசாக கிள்ளினாற் போல உருட்டவும். இது மிகவும் முக்கியம்).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, நன்றாகக் காய்ந்ததும் உருட்டிய சீடைகளைப் போடவும். (சீடைகளைப் எண்ணெயில் போடும் போது அதிகமாகவே எடுத்துப் போடவும்).
சீடைகள் பொன்னிறமாக வேகும் வரை திருப்பிப் போட்டு, நன்கு பொரியவிட்டு எண்ணெயை வடித்தெடுத்து டிஷ்யூ பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.
குறிப்புகள்:
சீடை வெடிப்பதற்கான சில காரணங்கள்:
சீடையை அதிகம் அழுத்தி உருட்டினால், அழுத்தத்தின் காரணத்தினாலும், எண்ணெய் சுத்தமானதாக இல்லையென்றாலும் வெடிக்கும்.
மாவில் தூசி, துரும்பு இருந்தாலும் வெடிக்கும். அதனால் மாவை இரண்டு முறை சலித்துச் சேர்க்க வேண்டும்.
தேங்காய் துருவலில் நார் அல்லது தூசி இருந்தாலும் வெடிக்கும்.
கவனமாகச் சேர்க்கவும். எள்ளிலும் கல் இல்லாமல் சுத்தப்படுத்திச் சேர்க்கவும்.
உருட்டிய சீடைகளை எண்ணெயில் போடும் போது குறைவாகப் போட்டால் வெடிக்கும். அதனால் சீடைகளை அதிகமாகவே (நிறைவாக) எடுத்துப் போட்டுப் பொரிக்கவும்.