சிக்கன் வடை (1)
தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி - 1/4 கிலோ
முட்டை - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 6
இஞ்சி - ஒரு அங்குலம்
பூண்டு - 10 பல்
தேங்காய் பூ - 1 1/2 கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு மற்றும் தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலும்பில்லாத கோழி இறைச்சியை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழி கறியுடன், நறுக்கின வெங்காயம் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கறி மசாலா, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அதிலேயே நறுக்கின கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினையும் சேர்க்கவும். விரும்பினால் சிறிது புதினாவை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து வடை மாவு பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக மாவை எடுத்து, வடைகளாகத் தட்டி போட்டு 2 நிமிடம் வேகவிடவும். கடாயின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு 4 அல்லது 5 வடைகள் தட்டிப் போடலாம்.
இரண்டு நிமிடத்தில் ஒரு பக்கம் லேசாக சிவந்தவுடன், வடைகளைத் திருப்பிப் போட்டு மறுபுறமும் பொன்னிறமாக சிவக்க வேகவிடவும்.
சுமார் 3 நிமிடங்கள் கழித்து வடைகள் வெந்ததும் எடுத்து பரிமாறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இதனைச் செய்யவும்.