சான்ட்விச் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய ப்ரட் - 3 ஸ்லைஸ்

கடலை மாவு - 1/4 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி சட்னி - 2 மேசைக்கரண்டி

தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1

காரட் - 1

கொத்தமல்லி - 2 கொத்து

உப்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 கப்

செய்முறை:

முதலில் கொத்தமல்லிச் சட்னி தயாரித்து கொள்ளவும். 4 கொத்து கொத்தமல்லி, சிறு நெல்லிக்காய் அளவு புளி, 3 பச்சை மிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

காரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ப்ரட்டை முதலில் இரண்டாக நறுக்கிக் கொண்டு பிறகு இரண்டு துண்டுகளையும் 6 துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத் தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் கொட்டி, அதில் தண்ணீர் கால் கப் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள ப்ரட் துண்டு ஒன்றை எடுத்து, அதன் ஒரு புறத்தில் கொத்தமல்லி சட்னியை பூசவும்.

பிறகு மேலே ஒரு ப்ரட் துண்டை வைத்து தக்காளி சாஸை தடவவும்.

அதற்கும் மேலே ஒரு ப்ரட் துண்டை வைத்து காரட் துருவலுடன் வெங்காயம் சிறிது வைக்கவும்.

அதன் மேலே ஒரு ப்ரட் துண்டை வைத்து, எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அழுத்திக் கொள்ளவும். இல்லையெனில் மிகவும் உயரமாக இருக்கும். மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்க சிரமமாக இருக்கும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். ப்ரட்டை கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு நன்கு தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இருபுறமும் திருப்பிப் போட்டு, பஜ்ஜி பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்புகள்:

ப்ரட் பிரிந்து வராமல் இருக்க, மாவு பிரெட்டின் அனைத்து புறங்களிலும் படுமாறு தோய்த்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அதிகம் ஊற்றிக் கொண்டால் வசதியாக இருக்கும்.