கோதுமைரவை வடை
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமைரவை - 1/2 கப்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்
சோயா உருண்டைகள் - 10
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஜவ்வரிசி - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1/4 தேக்கரண்டியில் பாதியளவு
சர்க்கரை - ஒரு பின்ச்
ப்ரெட் தூள் - 1/2 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சம்பா கோதுமைரவை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவை 10 நிமிடம் வேக வைத்து குளிர்ந்த தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த கோதுமையில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு போடவும். அதனுடன் வேக வைத்துள்ள சோயா, ஜவ்வரிசி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், வெங்காயம், சர்க்கரை இவற்றை ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, கரம் மசாலாத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் ப்ரெட் தூள் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கையால் எடுத்து உருட்டும் பதத்திற்கு கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவை சிறிய எலுமிச்சையளவு எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போடவும்.
இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.