கொண்டைக்கடலை கட்லெட்
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 200 கிராம்
காரட் - 25 கிராம்
உருளைக்கிழங்கு - 25 கிராம்
பீன்ஸ் - 25 கிராம்
முட்டைக்கோஸ் - 25 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
எலுமிச்சை - ஒரு மூடி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் காரட்டை தோல் சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 2 விசில் விடவும்.
பிறகு ஊறிய கொண்டைக்கடலையை மிக்ஸியில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். (தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், வேக வைத்த காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
அதனுடன் கொண்டைக்கடலை விழுது மற்றும் ஒன்றரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறிவிடவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழை தூவவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மேலே எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு முறை கிளறிவிடவும்.
தயார் செய்த கொண்டைக்கடலை மசாலாவை நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி விட்டு வில்லைகளாக வெட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்திருக்கும் வில்லைகளைப் போட்டு பொன்னிறமாக எடுத்து பரிமாறவும்.