காராகருணை வடை
தேவையான பொருட்கள்:
காராகருணை - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 10
பொட்டுக்கடலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காராகருணையை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை நுணுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய காராகருணையை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பொட்டுக்கடலை மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கின சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பொடி செய்த சோம்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். நறுக்கின வெங்காயத்தை கைகளால் பிசைந்து விட்டு போடவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் தெளித்து பிசைய தேவையில்லை.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து வட்டமாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போடவும்.
பின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் அடங்கி வடை வெந்து சிவக்க வந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறவும்.