உளுந்து வடை
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கிய உளுந்து - 1 கப்
வடித்த சாதம் - ஊறிய உளுந்து அளவில் 1/4 பங்கு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - ஒரு துண்டு
குரு மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை பத்து மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுந்து, சாதம் இரண்டையும் சிறிதளவே தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் ஆட்டவும். கைகளில் தண்ணீர் தொட்டு எடுக்க பந்து போல் வரும். இதுதான் சரியாக இருக்கும்.
ஆட்டிய மாவில் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், குருமிளகு, உப்பு, கொத்தமல்லி சேர்க்கவும்.
இதனை கைகளால் நன்கு கலந்து கொள்ளவும். உப்பு சேர்த்திருப்பதால் வெங்காயம் நீர் விட்டுவிடும் எனவே கலந்த உடனே பொரிக்கவும்.
வடையைத் தட்ட, இரு உள்ளங்கையையும் தண்ணீரில் நனைத்து உள்ளங்கை கொள்ளும் அளவு மாவு எடுத்து மெல்ல பரப்பி அதில் எட்டணா அளவில் ஓட்டை போடவும்.
தட்டிய வடையை இன்னொரு கையில் மாற்றி சூடான எண்ணெயில் போடவும்.
மெல்ல ஒரு பக்கம் சிவந்தவுடன் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் வேக வைக்கவும்.
வடை பொரிந்து பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் குமிழ்கள் அடங்கியிருந்தால் வடை வெந்து விட்டது என்று அர்த்தம்.
எண்ணெயை வடிகட்டி பாத்திரத்தில் போட்டு எண்ணெய் வடிந்ததும் பரிமாறவும்.