உருளைக்கிழங்கு கட்லெட்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - ஒன்று

இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

கார்ன் ஃப்ளார் - 1 மேசைக்கரண்டி

மல்லித் தழை ( பொடிதாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி

முட்டை - 1

ப்ரெட் க்ரெம்ப்ஸ் - 3/4 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். (சிவக்க வதக்க வேண்டாம்).

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் வதக்கியவற்றை சேர்த்து, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். (இந்த கலவையை கையில் வைத்து உருட்டினால் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். சற்று ஒட்டுவது போல் இருந்தால் ஒரு மேசைக்கரண்டி அளவு ப்ரெட் க்ரெம்ப்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்).

சிறு எலுமிச்சை அளவு கலவையை எடுத்து விருப்பமான வடிவில் தட்டி முட்டையின் வெள்ளைக்கருவில் தோய்த்தெடுத்து வைக்கவும். (முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்).

அதை ப்ரெட் க்ரெம்ப்ஸில் நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ப்ரெட் க்ரெம்ப்ஸ் நன்றாக ஒட்டிக்கொள்ளும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார். சில்லி சாஸுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

கட்லெட்டுகளை ப்ரெட் க்ரெம்ப்ஸில் பிரட்டி ஒரு தட்டில் பரவலாக அடுக்கி ஃப்ரீசரில் வைத்து உறைந்ததும் ஜிப்லாக்கில் போட்டு ஃப்ரீசரில் வைத்துக்கொண்டால் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தேவையான போது எடுத்து டீஃப்ராஸ்ட் செய்து பொரிக்கலாம். உருளைக்கிழங்குடன் வேகவைத்த பட்டாணியும் சேர்த்துக்கொள்ளலாம்.