ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பார்கிள் (மஞ்சள்நிற அஸ்பராகஸ்) - 250கிராம்

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையானளவு

மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

பால் - தேவையானளவு

வெங்காயம் (சிறிதாக வெட்டியது) - ஒன்று

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் (சோம்பு) அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை (சிறிதாக வெட்டியது) - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு (விரும்பினால்)

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மஞ்சள்நிற ஸ்பார்கிளை (அஸ்பராகஸ்)தடிப்பான பகுதியில் சிறிய பகுதியை வெட்டி அகற்றி விட்டு தடிப்பான பகுதியிலிருந்து மெல்லிய பகுதிவரை உள்ள தோலை சீவி அகற்ற வேண்டும்.

தடிப்பான பகுதியிலிருந்து மெல்லிய பகுதி வரை நேராக வெட்டவேண்டும். அதை மெல்லிய ஒரளவான துண்டுகளாக வெட்டவும். பின்பு அதை நன்றாக கழுவவும்.

அடுப்பில் வாயகன்ற சிறிய பாத்திரத்தை வைத்து அதில் அரைவாசிக்கு தண்ணீரை விட்டு அதில் வெட்டி துப்பிரவு செய்த ஸ்பார்கிளை (அஸ்பராகஸ்) போட்டு சிறிதுநேரம்(5 நிமிடங்கள்) அவிய விடவும்.

சிறிது நேரத்தின்(5 நிமிடங்கள்) பின்பு அதில் பட்டரை போட்டு ஓரளவு அவிய விடவும். ஓரளவு அவிந்ததும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் (10 நிமிடங்கள்) அவிய விடவும்.

பின்பு அதில் பாலைவிட்டு நன்றாக(15 - 20 நிமிடங்கள்)அவிய விடவும். நன்றாக அவிந்த பின்பு அதில் உப்பு, கறிவேப்பிலை, தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழம்) ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் (5நிமிடங்கள்) அவியவிடவும்.

பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கவும். அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு அல்லது சிறிதளவு பட்டர் போட்டு சூடாக்கி அதில் கடுகு, சீரகம்(சோம்பு), வெங்காயம் தாளித்து அதனை செய்து வைத்திருக்கும்.

ஸ்பார்கிள் கறியில் போட்டு கலக்கிய பின்பு அதனை சோற்றுடன்(சாதத்துடன்)பரிமாறவும். இதோ சுவையான சத்தான ஸ்பார்கிள்கறி(அஸ்பராகஸ்) கறி தயாராகி விட்டது.

குறிப்புகள்:

ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) ஜரோப்பிய மக்களின் மிகமிக பிரபல்யமான மரக்கறி ஆகும் அத்துடன் இதனை ரோயல் மரக்கறி எனவும் அழைப்பார்கள் ஒவ்வொரு வருடமும் இந்த ஸ்பார்கிளுக்கு விழாக்கள் நடத்துவார்கள் அவ்விழாகளில் ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) அரசியாக வருபவர்களை அதிர்ஷடசாலிகளாக கருதி அவர்களுக்கு மிகமிக மரியாதை செய்வார்கள். அத்துடன் இந்த ஸ்பார்கிளிள்(அஸ்பராகஸ்) கார்போஹைட்ரேட், நார்சத்து, கொழுப்பு, புரதம், வைட்டமின் B1,B2,B3,B5,B6,B9,C, கால்சியம், இரும்பு, மெக்னீஸியம்,பாஸ்பரஸ், பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட ஸ்பார்கிளில் (அஸ்பராகஸ்) செய்யபட்ட கறியானது வித்தியாசமான சுவையுடனும் சத்துகளுடனும் காணப்படும் இதன் சுவையை இதனை செய்து பார்த்து அறியவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - வாயகன்ற பாத்திரத்தில் மஞ்சள்நிற ஸ்பார்கிளை (அஸ்பராகஸ்) போட்டு அவியவிடவும், பட்டரை போட்டு அவியவிடவும் (இல்லாவிட்டால் ஸ்பார்கிள் (அஸ்பராகஸ்)அவியாது) எச்சரிக்கை -ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.