வியட்நாம் சூப்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன்
அல்லது பீஃப் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - 2 இன்ச் அளவு துண்டு
கேரட் - 100 கிராம்
எலுமிச்சைப்பழம் - ஒன்று
மல்லிக் கீரை - 3 கொத்து
காய்ந்த மிளகாய் சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு சிறிய ஸ்பூன்
வெள்ளரிப் பிஞ்சு - ஒன்று
நூடுல்ஸ் - 100 கிராம்
முளைக்கட்டிய பச்சைப்பயறு - ஒரு பிடி
சிக்கன் ஸ்டோக்(க்யூப்) - பாதி
உப்பு - அரை ஸ்பூன்
செய்முறை:
முதலில் கறியை சுத்தம் செய்து, கேரட்டை தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி சூப் செய்யவேண்டிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
இஞ்சி துண்டை அடுப்பில் நேரடி தனலில், மெதுவான தீயில் சுட்டு, பிறகு தோலை நீக்கி நன்றாக நசுக்கி கறியுடன் போடவும்.
வெங்காயத்தையும் அதுபோல் தனலில் வேகும் அளவு தோலோடு சுட்டு, கருகிய தோலை நீக்கிவிட்டு 4 துண்டுகளாக வெட்டி கறியுடன் போடவும்.
அத்துடன் உப்பு சேர்த்து, சுமார் 3/4 லிட்டர் தண்ணீர், சிக்கன் ஸ்டோக் சேர்த்து கறி வேகும்வரை மூடிபோட்டு கொதிக்கவிடவும்.
இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நூடுல்ஸை பதமாக வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.
வெள்ளரிப் பிஞ்சை விரல் அளவு சற்று மெல்லியதாக 2 இன்ச் நீளத்தில் வெட்டிக்கொள்ளவும்.
மல்லிக்கீரையையும் நைசாக நறுக்கிக்கொள்ளவும். கறி வெந்தவுடன் அதை சற்று மெல்லிய துண்டுகளாக வெட்டி 3 சூப் கோப்பையில் 3 பங்காக பிரித்து போடவும்.
அதேபோல் நறுக்கிவைத்துள்ள வெள்ளரிப் பிஞ்சு, மல்லிக் கீரை, வேகவைத்த நூடுல்ஸ், முளைக்கட்டிய பச்சைப்பயறு அனைத்தையும் பிரித்து போட்டுக் கொள்ளவும்.
அதன் மேல் ரெடியான சூப்பை ஒவ்வொரு கோப்பையிலும் ஊற்றவும்.
அத்துடன் மிளகாய் சாஸ், சோயா சாஸ் சேர்த்து, எலுமிச்சைப்பழத்தையும் அதன் மேல் பிழிந்து சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த வியட்நாம் சூப் வித்தியாசமான ஒரு நல்ல சுவை கொண்டது. நன்றாக செரிமாணம் தரக்கூடியது.