வல்லாரை துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வல்லாரைக்கீரை(கழுவிய) - 150 கிராம்

பச்சைமிளகாய் - 5

உள்ளி(பூண்டு) - ஒரு பல்

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

தேங்காய்ப்பூ - அரைப்பாதி ( விரும்பினால்)

வெந்தயம் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - மிகமிக சிறியளவு

தேசிக்காய்சாறு(லைம் ஜூஸ்) - அரைத்தேக்கரண்டி

கடுகு - அரைத்தேக்கரண்டி

சீரகம்(தனியா) - அரைத்தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் வெறும் வாணலி(தாச்சி)யை வைத்து அதை சூடாக்கவும். பின்பு அதில் கடலைப்பருப்பினை போட்டு நன்றாக வறுக்கவும்.

ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். பின்பு இதனைப்போல உளுத்தம் பருப்பினையும் நன்றாக வறுக்கவும் .

ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். பின்பு இதனைப் போல பச்சைமிளகாயை நன்றாக வறுக்கவும்.

வறுத்ததும் அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். இதனைப் போல வெந்தயதை போட்டு உடனே எடுத்துவிடவேண்டும் (இல்லாவிட்டால் கைப்பு சுவை ஏற்படும்).

அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். இதனைப் போல பெருங்காயத்தூள் போட்டு உடனே எடுத்துவிடவேண்டும். (இல்லாவிட்டால் கைப்பு சுவை ஏற்படும்).

அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். அதன் பின்பு கழுவிய வல்லாரையுடன் இருக்கும் நீருடன் நன்றாக வறுக்கவும்.

பின்பு வறுத்த வல்லாரையுடன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்கவும். அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

அதன் பின்பு ஆறியதும் வறுத்த கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், உள்ளி,

வறுத்தவல்லாரை, வறுத்த வெந்தயம், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் இவையாவற்றையும் போட்டு கிரைண்டரில் (மிக்ஸியில்) அரைக்கவும்.

பின்பு தேங்காய்ப்பூ போட்டு கிரைண்டரில்(மிக்ஸியில்) நன்றாக அரைக்கவும்.

பின்பு தேசிக்காய்சாறு (லைம் ஜூஸ்) போட்டு கிரைண்டரில்(மிக்ஸியில்) நன்றாக அரைக்கவும்.

பின்பு அடுப்பில் வாணலி(தாச்சி)யை வைத்து எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம்(தனியா), வெங்காயம் தாளித்து துவையலில் போட்டு சாதத்துடன் அல்லது பாண் இட்லி, தோசை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

வல்லாரை துவையல் மிகமிக சுவையானதும் சத்தானதுமாகும். அத்துடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படும் ஒரு சிறந்த துவையலாகும். இதில் வைட்டமின், மினரல் நார்சத்து, கால்சியம், இரும்பு, கொழுப்பு போன்ற பல சத்துகள் காணப்படுகின்றன .எச்சரிக்கை - இருதய நோயாளர்,வல்லாரை அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.