லவேரியா (1)
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு (வறுத்து குற்றிதோல் நீக்கியது) - அரை சுண்டு
தேங்காய்ப்பூ - 1 + 1/2 சுண்டு
தூள் சர்க்கரை/ கற்கண்டு தூள் - அரை சுண்டு
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
(வறுத்துஅரித்த) அரிசிமா - ஒரு சுண்டு(நிரப்பி)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையான அளவு
வாழையிலை - (15 -18) துண்டுகள்
செய்முறை:
பாசிப்பருப்பை முக்கால் பதமாக அவித்து அதில் தேங்காய்ப்பூ, சர்க்கரை யாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து சர்க்கரை முற்றாக கரையும் வரை கிளறவும்.
பின்பு சர்க்கரைபாகு தடிக்கத் தொடங்கும் போது ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துகிளறி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவை போட்டு அதனுடன் உப்பு, நீர், எண்ணெய் விட்டு விரல்களால் நன்றாக பிசறிக்கொள்ளவும்.
பின்பு அதனுடன் தேவையானளவு கொதித்த நீரை விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக குழைக்க வேண்டும்.
அதன் பின்பு குழைத்த மாவை இடியப்ப உரலில் போட்டு அதை எண்ணெய் பூசிய வாழையிலை துண்டில் மெல்லிய இடியப்பங்களாக பிழியவும்.
அதன் நடுவில் பாசிப்பருப்பு கலவையில் ஒரு மேசைக்கரண்டி வைத்து இலையுடன் சேர்த்து பாதியாக மடித்து விளிம்பு பகுதிகளை மெதுவாக அமர்த்தவும்.
பின்பு இடியப்பதட்டில் இரண்டு இரண்டாக வைத்து ஆவியில் அவித்தெடுக்கவும்.
அதன் பின்பு அதை ஆறவிடவும். ஆறிய பின்பு அதை பரிமாறலாம்.
குறிப்புகள்:
லவேரியா ஒர் இனிப்பு வகையை சேர்ந்த உணவாகும். இதை இலங்கையை சேர்ந்த சிங்கள மக்கள் மிகமிக விரும்பி உண்பார்கள். இது அவர்களின் பாரம்பரிய உணவாகும். அத்துடன் இதில் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் B1,B2,B3,B6,B9, மெக்னீஸியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் சோடியம் ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன. மாற்று முறை -(1) வாழையிலைக்கு பதிலாக சாப்பாடு கட்டும் தாள்கள் அல்லது சாதாரண தாள்கள் பயன்படுத்தலாம்.(2)ஏலக்காய்த்தூளுக்கு பதிலாக அரைத்தேக்கரண்டி மிளகுத்தூள், (அரைதேக்கரண்டி) சீரகம் சேர்த்து பயன்படுத்தலாம். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.