மொராக்கோ கொத்துக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி - 1 கோப்பை (ஆட்டுக்கறி)

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

முட்டை - 3

கொத்தமல்லித்தழை - 1/2 கோப்பை (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

ஆலிவ் ஆயில் - 3 குழிக்கரண்டி

செய்முறை:

கொத்துக்கறியை சுத்தம் செய்து அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பும் போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடித்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் ஒரு வாயகன்ற மண்சட்டியில் எண்ணெய் விட்டு அதில் ஊற வைத்துள்ள உருண்டைகளை இரண்டிரண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.

அதே சட்டியில் இருக்கும் மீதி எண்ணெயில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி என்று ஒவ்வொன்றாக தனித்தனியே வதக்கவும்.

அவை நன்றாக வதங்கியதும். அதற்கு தேவையான உப்பு போடவும், சிறிது வெந்நீர் ஊற்றவும்.

அடுத்து அந்த கலவையினுள் பொரித்து எடுத்துள்ள கறி உருண்டைகளை அதில் போட்டு பரப்பி வைக்கவும்.

மூன்று முட்டைகளையும் அதன் மேலே உடைத்து ஊற்றவும். அதற்கு மேல் மல்லித்தழைத்தூவி ஒரு மூடியால் மண்சட்டியினை மூடி மிதமான தீயில் 6 - 10 நிமிடங்கள் வைக்கவும். கறி ரெடியாகி விடும்.

இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, ப்ரெட்டுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

குறிப்புகள்:

இந்த கறியினை எனக்கு செய்ய சொல்லித்தந்தவர் எனது கணவரின் நண்பர் ஒருவர். மற்ற பாத்திரத்தையும் பயன்படுத்தலாம், எதற்கு மண்சட்டியினை உபயோகிப்பது என்றால் சட்டி முதலிலேயே சூடு ஏறி இருப்பதால் நாம் மிதமான தீயில் சமைக்கும் போது விரைவாக கறி வெந்துவிடும் அதற்கு வேண்டிதான். சுவையும் நன்றாக இருக்கும்.