மைசூர் பருப்பு கறி
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு (துப்பரவாக்கி கழுவியது) - 200 கிராம்
பால் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை(வெட்டியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு) (வெட்டியது) - 3 + 1 பற்கள்
மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் (வெட்டியது) - ஒன்று
பச்சைமிளகாய்(குறுக்காக இரண்டாக வெட்டியது) - ஒன்று
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - (கால் - அரை) தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்பழம்)சாறு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர்விட்டு அதை நன்றாக கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின்பு அதில் துப்பரவாக்கி கழுவி வைத்திருக்கும் மைசூர் பருப்பை போட்டு நன்றாக அவியவிடவும்(கரண்டி எதையும் பருப்பில் போடகூடாது, போட்டால் பருப்பு அவியாது)(பருப்பு அவிய தேவையான அளவு தண்ணீர் விடவும்).
பருப்பு முக்கால்பதம் அவிந்ததும் அதில் உள்ளி(பூண்டு), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள், சிறிதளவு பெருஞ்சீரகம், மிளகுத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை குறுக்காக இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய், அரைப்பாதி வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும்.
இவையாவும் நன்றாக அவிந்ததும் இதனுடன் பட்டரை போட்டு கலந்து அவியவிடவும்.
எல்லாம் நன்றாக அவிந்த பின்பு அதில் பால், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.
இவையாவும் நன்றாக அவிந்த பின்பு இதனுடன் இன்னும் சிறிதளவு (வெட்டிய) கறிவேப்பிலை, தேசிக்காய் (எலுமிச்சம்பழம்)சாறு ஆகியவற்றை போட்ட சிறிதுநேரத்தின் பின்பு அடுப்பிலிருந்து இந்த பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு வெடிக்கவிடவும்.
கடுகுவெடித்ததும் அதில் வெட்டிய வெங்காயம், பெருஞ்சீரகம், வெட்டிய ஒரு உள்ளி(பூண்டு), சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு இவற்றை செய்து வைத்திருக்கும் பருப்பில் போட்டு நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு சுவையான சத்தான மைசூர் பருப்பு கறி தயாராகிவிடும்.
ஒருதட்டில் சோறு(சாதம்), இடியப்பம், பாண், இட்லி, தோசை இவற்றில் ஒன்றைவைத்து அதனுடன் மைசூர் பருப்பு கறியையும் வைத்து பரிமாறலாம்.
குறிப்புகள்:
மைசூர்பருப்பு கறி சுவையானதும் புரதம், கொழுப்பு, மினரல், வைட்டமின், பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் அடங்கியதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் விரும்பக்கூடியதுமான கறி ஆகும். எச்சரிக்கை - இருதயநோயாளர், பருப்பு அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டியவிசயங்கள் - பருப்பு நன்றாக அவிந்துவிட்டதா என பார்க்கவும். மாற்று முறை - மிளகாய்த்தூள் போடாமலும் செய்யலாம் விரும்பினால் சிறிதளவு அஜினோமோட்டோ போடலாம்.