மெக்ஸிக்கன் சில்லி
தேவையான பொருட்கள்:
கோழி - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
கிட்னி பீன்ஸ் - இரண்டு கோப்பை
குடைமிளகாய் - ஒன்று
ஃபுரோஸன் மக்காசோளம் - ஒரு கோப்பை
சிக்கன் ஸ்டாக் - இரண்டு கோப்பை
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஜாலபீனோ பெப்பர் - ஒன்று
துருவிய பேக்கிங் சாக்லெட் - இரண்டு தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி - 398ml அளவு இரண்டு கேன்
புளித்த க்ரீம் - இரண்டு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு
ஒரிகனோ தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் ஆயில் - கால் கோப்பை
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து எலும்புகளில்லாமல் கைமா பதத்திற்கு நொறுங்க நறுக்கவும். அல்லது ரெடிமேடாக கொத்துக்கறியாக கிடைத்தால் அதையே வாங்கிக் கொள்ளவும்.
கிட்னி பீன்ஸ்ஸை முந்தின நாள் இரவே ஊறவைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் மற்றும் ஜாலபீனோ பெப்பர் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை நொறுங்க நறுக்கி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கோழிக்கறியைப் போட்டு நன்கு சிவக்க வதக்கவும். தொடர்ந்து வெங்காயம், பூண்டு, குடைமிளகாயைப் போட்டு வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புளித்த க்ரீமைத்தவிர எல்லாப்பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு கிளறி விட்டு சிக்கன் ஸ்டாக் மற்றும் பீன்ஸ் வெந்த நீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடிப் போட்டு அரைமணி நேரம் வேக விடவும்.
கறி நன்கு வெந்து கலவை கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். காரம் மேலும் தேவையென்றால் தேவையான மிளகுத்தூளை போட்டுக் கொள்ளலாம்.
சுவையான இந்த மெக்ஸிக்கன் சில்லியை கோப்பைகளில் ஊற்றி புளித்த க்ரீமையும் நறுக்கிய கொத்தமல்லியையும் மேலாக போட்டு டோர்ட்டில்லா பிரெட்டுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
விருந்துக்களின் போது இந்த சிக்கன் சில்லியை ஒரு நாள் முன்பாகச் செய்து, நன்கு ஆறவைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து தேவைப்படும்போது சூடுபடுத்தி பரிமாறினால், சுவை அதிகமாக இருக்கும். இதில் பிடித்தமான எல்லாவித இறைச்சியையும் சேர்த்து செய்யலாம். இறைச்சியை சேர்க்காமல் சைவமாகவும் செய்யலாம்.