மிதிவெடி (1)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு(அவித்தது) - 500 கிராம்
பச்சை மிளகாய் - (1- 3)
முட்டை(அவித்தது) - 4
பால் - (1/4 - 1) கப்
வெங்காயம்(வெட்டியது) - ஒன்று
கறிவேப்பிலை(வெட்டியது) - சிறிதளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாயத்தூள் - (1- 3) மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சி(நசுக்கியது) - (1/4 - 1)தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்காய்) சாறு - சிறிதளவு
ரோல் சீட் - ஒரு பாக்கெட்
முட்டை (வெள்ளைகரு)(அடித்தது) -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
உள்ளி(பூண்டு)(வெட்டிய) - 2 பற்கள்
ரஸ்க் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பலகையில் அவித்த முட்டையை வைத்து அதனை இரண்டு சம துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அவித்த உருளைக்கிழங்கினை ஓரளவு பெரிய சதுரமான துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும் அதில் பெருஞ்சீரகம், கருவேப்பிலை சிறிதாக வெட்டிய வெங்காயம், சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய், சிறிதாக வெட்டிய உள்ளி(பூண்டு), நசுக்கிய இஞ்சி ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
இவையாவும் ஓரளவு தாளித்ததும் அதனுடன் உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக பிரட்டவும்.
இவை யாவற்றையும் நன்றாக பிரட்டிய பின்பு அதனுடன் ஓரளவு சதுர துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
அதன் பின்பு இதனுடன் சிறிதளவு பாலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
இவையாவும் நன்றாக கலந்த பின்பு இதனுடன் இன்னும் சிறிதளவு வெட்டிய கறிவேப்பிலை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை கறியுடன் சேர்ந்து அவிக்கவும்.
இவையாவும் அவிந்த பின்பு தூளின் வாசனை இல்லாமல்)தேசிக்காய்(எலுமிச்சம்காய்)சாறு விட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு கறியுள்ள பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுத்து அதனை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை வெள்ளை கருவை போட்டு அதனை நன்றாக முள்ளுகரண்டியால்(நுரைக்கும்படி) அடித்து வைக்கவும். ஒரு தட்டில் ரஸ்க் தூளை போட்டு நன்றாக பரப்பி வைக்கவும்.
கறி ஆறிய பின்பு ரோல் சீட் பாக்கெட்டின் முகப்புபகுதியை வெட்டி அதனுள் இருக்கும் ரோல் சீட்டில் இரண்டினை எடுத்து அதனை ஒரு பலகையில் ஒன்றின் மேல் ஒன்றாக விரித்து வைக்கவும்.
விரித்து வைத்த பின்பு அதில் ஆறிய கறியில் சிறிதளவு வைத்து அதன் நடுவில் அவித்து வெட்டிய ஒரு பாதி முட்டையை வைத்து ஓரளவு நீள்சதுரமாகவும், ஓரளவு அகலமாகவும் ஓரளவு உயரமாகவும் வரக்கூடியதாக நன்றாக மடித்து அதன் ஓரங்களை சிறிதளவு முட்டை வெள்ளை கருவினால் ஒட்டி வைக்கவும்.
பின்பு இதனைப்போல எல்லாவற்றையும் செய்து வைக்கவும். எல்லாவற்றையும் செய்த பின்பு ஒவ்வொன்றையும் முட்டை வெள்ளைகருவில் நனைக்கவும். நனைத்த பின்பு அதனை ரஸ்க் தூளில் போட்டு பிரட்டி வைக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதனை நன்றாக தாட்சியில்(வாணலியில்) பூசிய பின்பு அடுப்பை நல்லாக குறைத்து வைக்கவும்.
அடுப்பை நல்லாக குறைத்து வைத்தபின்பு இந்த வெடியை அடுப்பில் உள்ள தாட்சியில் (வாணலியில்) போட்டு சிறிதளவு நேரம் பொரிய விடவும்.
பொரிந்த பின்பு இதனை மற்றபக்கமும் திருப்பி விட்டு அதனை பொரிய விடவும் இப்படியே 6 பக்கமும் திருப்பிபோட்டு பொரியவிடவும்.
(மேல்பகுதி, கீழ்பகுதி, 4 பக்கப்குதி). பொரிந்த பின்பு அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும் .
இதனைப்போல எல்லாவற்றையும் செய்து மூடி வைக்கவும். செய்து மூடிவைத்த சில நிமிடங்களின் பின்பு மிதிவெடி (மசாலாமுட்டைரொட்டி) தயாராகி விடும். பின்பு ஒரு தட்டில் மிதிவெடியை வைத்து அடுக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
மிதிவெடி(மசாலைமுட்டைரொட்டி) இலங்கையின் பிரபல்யமானதும் இலங்கை மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுமாகும் சுவையானதும், கார்போஹைட்ரேட், மினரல், புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புசத்து ஆகிய பலசத்துகள் அடங்கியது அத்துடன் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடியது. ஆகவே இதன் சுவையை அறிய இதனை செய்து பார்த்து உண்ணவும். எச்சரிக்கை -இருதயநோயாளர்,சக்கரைநோயாளர், உருளைக்கிழங்கு அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - ரோல்சீட்க்கு பதிலாக கோதுமைமாவி ற்கு(மைதாமாவிற்கு)சிறிதளவு உப்பு ,தண்ணீர் ஆகியவற்றை போட்டு ஓரளவு தடிப்பான தோசை பதத்திற்கு கரைத்து தோசைக்கல்லில் ஊற்றி ஓரளவு தடிப்பான தோசையாக சுட்டு தோசையாக சுட்டபின்பு அதன் சூட்டுடன் அதில் கறியுடன் முட்டையை வைத்து செய்யலாம்.