மரவள்ளிக்கிழங்கு கருவாட்டுக் கறி
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம் கருவாடு - 100 கிராம் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி பால் - 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் - பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் - 30 கிராம் செத்தல் மிளகாய் - 3 கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருவாட்டை 10 நிமிடங்கள் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கிழங்கையும் கருவாட்டையும் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
பாத்திரத்தை மூடி வைக்கவும். நன்கு முழுவதுமாக மூட வேண்டாம். மரவள்ளிக்கிழங்கில் ஒரு வித நச்சுத் தன்மை இருக்கும்
வேக வைக்கும் போது வெளியேறும் ஆவியின் வழியாக அத்தன்மை போய் விடும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கவும்.
மரவள்ளிக்கிழங்கு மற்றும் கருவாடு வெந்ததும் மூடியை திறந்து நன்கு மசித்து விடவும்.
அதன் பிறகு பால் மற்றும் கறித்தூள் சேர்த்து கிளறி விட்டு உப்பின் அளவை சரிப்பார்த்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். உப்பின் சுவை அதிகமாக உள்ள கருவாடாக இருப்பின் உப்பு சேர்க்க தேவையில்லை.
கலவையை நன்றாக ஒரு முறை கிளறி விட்டு கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து கலவையுடன் கொட்டி கிளறி விடவும்.
மேலே எலுமிச்சம் பழம் பிழிந்து சிறிய பெளலில் எடுத்து வைத்து பரிமாறவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு கருவாட்டு கறி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.