பேரீச்சம்பழ சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் - 250 கிராம்

செத்தல் மிளகாய் (காய்ந்தமிளகாய்) - (10 - 15)

இஞ்சி - 2"நீளமான ஒரு துண்டு

உள்ளி (பூண்டு) - 4 பல்

வினிகர் - ஒரு டம்ளர்

சீனி (சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)

கஜு(முந்திரிப்பருப்பு (சிறிதாக வெட்டியது) - 50கிராம்

உப்பு - தேவையானளவு

செய்முறை:

பேரீச்சம்பழத்தை விதை நீக்கி துப்பிரவாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு அரைப்பதமாக அரைத்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), இஞ்சி, உள்ளி(பூண்டு)ஆகியவற்றை 2 மேசைக்கரண்டி வினிகர் விட்டு நன்றாக அரைத்தெடுக்க வேண்டும்.

அதன் பின்பு அரைத்து வைத்துள்ள பேரீச்சம்பழம், அரைத்து வைத்துள்ள கலவை, சீனி(சர்க்கரை), உப்பு, மிகுதியான வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அது சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள கலவையை போட்டு காய்ச்சவும்.

இக்கலவை ஓரளவு தடிக்க தொடங்கும் போது கஜுவை(முந்திரிப்பருப்பு) சேர்த்து கிளறவும்.

இக்கலவை நன்றாக தடித்ததும் இக்கலவையுள்ள பாத்திரத்தினை அடுப்பிலிருந்து இறக்கவும். அதன் பின்பு இக்கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.

நன்றாக ஆறிய பின்பு இக்கலவையை தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் ஊற்றி அதை காற்று உட்போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.

அதன் பின்பு இச்சட்னி தேவைப்படும் நேரங்களில் எடுத்து பரிமாறவும்.

சட்னியை பற்றீஸ், ரோல்ஸ் கட்லெட், இடியப்பம், தோசை, இட்லி, சமோசா ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

குறிப்புகள்:

இனிப்பு சுவையை உடையதும், இரும்புசத்து நிறைந்ததும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதுமான பழமே பேரீச்சம்பழம் ஆகும். இதனுடன் மருத்துவகுணம் நிறைந்த இஞ்சியும், உள்ளியுடன் கால்சியம்,மெக்னீஸியம் உள்ள மிளகாயும் சேர்ந்து இனிப்பு சுவையும் உறைப்பு சுவையும் கலந்து வித்தியாசமான சுவையுடன் காணப்படும் சட்னியே பேரீச்சம்பழம் சட்னி ஆகும். இதன் சுவையை அறிய நீங்களும் இதனை செய்து பார்த்து சுவைக்கவும். எச்சரிக்கை - பேரீச்சம்பழம் அலர்ஜியுடையவர்கள், சர்க்கரைநோயாளர், இருதயநோயாளர் ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - எல்லாவற்றையும் நன்றாக அரைத்தெடுத்து நன்றாக (தடிப்பாக) காய்ச்சவும் அத்துடன் இந்த சட்னி வைத்திருக்கும் போத்தலில் ஈரமான அல்லது துப்பரவற்ற கரண்டியை வைக்க வேண்டாம்(அதை வைத்தால் சட்னி பழுதடைந்துவிடும்).