பேரீச்சம்பழக்கேக்
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம்(விதை நீக்கியது) - 500 கிராம் மாஜரீன் அல்லது பட்டர் - 500 கிராம் சீனி - 500 கிராம் முட்டை - 10 மைதா - 250 கிராம் ரவை - 250 கிராம் பேக்கிங்பவுடர் - ஒரு மேசைக்கரண்டி தேயிலை - 2 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
செய்முறை:
மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 5 அல்லது 6 முறை சலித்து எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து வெள்ளை கருவையும்
மஞ்சள் கருவையும் தனித்தனியாக எடுக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கோப்பை அல்லது பாத்திரத்தில் ஒன்றரை கப் சுடுத்தண்ணீரில் தேயிலையை போட்டு ஊற வைத்து சாயத்தை எடுக்கவும்.
பேரீச்சம் பழத்துடன் தேயிலை சாயத்தை ஊற்றி 6 அல்லது 7 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மாஜரீனையும் சீனியையும் சேர்த்து போட்டு நன்கு மென்மையாகும் வரை அடிக்கவும். ஒரே பக்கமாக அடிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். அதிக நேரம் அடிக்க தேவையில்லை.
தனியாக பிரித்து வைத்திருக்கும் வெள்ளை கருவை நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அடித்த வெள்ளை கருவை மாஜரீன் சீனி கலவையில் ஊற்றி அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும். இந்த கலவையில் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை சேர்த்து கலக்கவும்.
பேரீச்சம் பழத்தை சேர்த்த பின்னர் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும்.
இந்த கலவையுடன் மைதாமாவையும் சிறிது சிறிதாக சேர்த்து எல்லாம் ஒன்றாக சேரும்படி கலக்கவும்.
அவனை முற்சூடு செய்து வைக்கவும். கேக் ட்ரேயில் பேக்கிங் பேப்பரை விரித்து அதில் கலவையை ஊற்றி பரப்பி விடவும்.
டிரேயை அவனில் வைத்து 175 Fல் பேக் செய்யவும். 45 - 50 நிமிடம் கழித்து கேக் வெந்ததும் எடுக்கவும். கேக் வெந்ததா என்பதை அறிய ஒரு மெல்லிய குச்சி அல்லது கத்தியின் நுனிபகுதியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும்
இதுவே கேக்கின் பதம். கேக் ஆறிய பின்னர் துண்டுகளாக்கி பரிமாறவும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்த சுவையான பேரீச்சம்பழக்கேக்கை செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். இலங்கை சமையல் செய்முறைகள் பலவற்றை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.