பேக்கிங் முட்டைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் (சிறிதாக வெட்டியது) - பாதி
காரட் (சிறிய)(துருவியது) - பாதி
லீக்ஸ் (சிறிதாக வெட்டியது) - சிறிதளவு
தக்காளிப்பழம் (சிறிதாக வெட்டியது) - 2
கறிவேப்பிலை (சிறிதாக வெட்டியது) - தேவையானளவு
பச்சைமிளகாய் (சிறிதாக வெட்டியது) - ஒன்று
மிளகாய்தூள் - தேவையானளவு
மெட்ராஸ்கறித்தூள் - தேவையானளவு (விரும்பினால்)
மஞ்சள்தூள் - சிறிதளவு (விரும்பினால்)
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (தனியா) - அரை தேக்கரண்டி
இஞ்சி (சிறிதாக வெட்டியது) - மிகமிக சிறியதுண்டு
உள்ளி(பூண்டு) (சிறிதாக வெட்டியது) - 4 பல்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
பால், தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
பழப்புளி (கரைத்தது) - தேவையானளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் துருவிய காரட், சிறியதாக வெட்டிய லீக்ஸ், தக்காளிப்பழம், சிறிதாக வெட்டிய சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பச்சைமிளகாய், கால் கரண்டி மிளகாய்த்தூள், மிகமிக சிறியதுண்டு இஞ்சி, சிறிதாக வெட்டிய 2 பல் உள்ளி(பூண்டு), சிறிதளவு உப்பு ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நன்றாக(கலந்து)அடிக்கவும் (இதில் கலந்தவையாவும் நன்றாக அரைக்கப்பட்டு முட்டைநுரைத்து காணப்பட வேண்டும்).
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) அடித்தவற்றை ஒரு தட்டையான பாத்திரத்தில் அல்லது நீராவியில் வேகவைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில் போடவும்.
தட்டையான பாத்திரத்தில் போட்டால் அதனை மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் செய்யலாம் அல்லது நீராவியில் வைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில் போட்டால் அதை நீராவியில் அவிக்கவும்.
இவை பேக்செய்த அல்லது நீராவியில் அவித்த பின்பு அதை ஓரளவு சிறிய சதுர அல்லது விரும்பிய அளவில் அல்லது விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு அது கொதித்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
பின்பு அதில் வெட்டிய வெங்காயத்தை போடவும் .
வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம் (தனியா) போட்டு தாளிக்கவும். தாளித்த பின்பு அதில் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு மிகுதியாக உள்ள தக்காளிப்பழத்தை போட்டு நன்றாக கலக்கவும். பின்பு அதனுடன் மிகுதியாக உள்ள உள்ளி(பூண்டு) கறிவேப்பிலை, மெட்ராஸ்கறித்தூள், மஞ்சள்தூள், உப்பு, பால், சிறிதளவு தண்ணீர், கரைத்தபழப்புளி, அஜினோமோட்டோ ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
கலந்தவற்றை நன்றாக கொதிக்கவிடவும் . அவை நன்றாக கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைதுண்டுகளை போட்டு கலந்து கொதிக்கவிடவும் (விரும்பினால் பிரட்டல் கறியாகவும் செய்யலாம்).
கறிகொதித்ததும் சுவையானதும் வித்தியாசமானதுமான முட்டைகுழம்பு தயாராகிவிடும். பின்பு அடுப்பிலுள்ள பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலுள்ள குழம்பை சோற்றுடன் (சாதத்துடன்) அல்லது இடியப்பம், புட்டு, பாண் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றில் எதனுடனாவது சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த முட்டைகுழம்பு சுவையானதும் புரதம், கொழுப்பு மினரல், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற பல சத்துகள் அடங்கியதும் வித்தியாசமானதும், பெரியவர் முதல் சிறியவர்கள் விரும்பகூடியது ஆகும். மாற்று முறை - மரக்கறிவகைகளில் விரும்பியதை அல்லது எலும்பில்லாத இறைச்சி வகைகள், முள்ளு எடுத்த மீன்வகைகள், சுத்தமாக்கப்பட்ட இறால், நண்டு இவையாவற்றையும் முட்டையுடன் கலந்தும் செய்யலாம். இவற்றில் சிலவற்றை மட்டும் சேர்த்தும் செய்யலாம், வெங்காயம் பச்சைமிளகாயை மட்டும் சேர்த்தும் செய்யலாம். எச்சரிக்கை - இருதய நோயாளர், முட்டை அலர்ஜி உடையவர்கள் ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்