பிஸ்ஸா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - அரை கிலோ

எண்ணெய் - 200 மில்லி

பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்

சீனி - ஒரு ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன்

சாஸ் செய்வதற்கு :

பழுத்த தக்காளி - 2

வெங்காயம் - ஒன்று

வறுத்து பொடியாக்கிய :

மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

தைம் இலை (காய்ந்தது) - ஒரு டீஸ்பூன்

பெர்ஸில் இலை (காய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்

பப்ரிகா பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்

சிக்கன் க்யூப் - ஒன்று

உப்பு - ஒரு ஸ்பூன்

மேலே அலங்கரிக்க :

கொத்திய ஆட்டுக்கறி - 300 கிராம்

குடை மிளகாய் - ஒன்று

துருவிய சீஸ் - கால் கிலோ

செய்முறை:

பிஸ்ஸா செய்வதற்கு 5 அல்லது 6 மணி நேரத்திற்கு முன்பே மைதா மாவில் உப்பு, சீனி, பேக்கிங் பவுடர் போட்டு 150 மில்லி எண்ணெய் ஊற்றி கலந்து வெது வெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து விடவும்.

தக்காளி, வெங்காயத்தை வெட்டி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் மீதியுள்ள 50 மில்லி எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போடவும்.

அதனுடன் வறுத்து பொடியாக்கிய மிளகாய் தூள், தைம் இலை, பெர்ஸில் இலை, பப்ரிகா பவுடர், சிக்கன் க்யூப், உப்பு இவை அனைத்திலும் மேற்கூறிய அளவில் பாதியளவுகள் சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை நன்கு வதக்கி விட்டு சாஸை ஆறவிடவும்.

சாஸுடன் சேர்க்க சொன்ன பொருட்களில் மீதியுள்ள பாதி பொருட்களை கொத்திய கறியில் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.

குடை மிளகாயை சிறு கட்டங்களாக நறுக்கிவைக்கவும். 5 அல்லது 6 மணி நேரத்திற்கு பிறகு, பிசைந்து வைத்த மைதாவை பிஸ்ஸா மெஷினில் வட்டமாக சற்று மொத்தமாக விரித்து அதன் மேல் பரவலாக துருவிய சீஸில் 1/3 பங்கு தூவவும்.

பிறகு அதன் மேல் செய்துவைத்துள்ள சாஸை பரவலாக ஊற்றவும். அதன் மேல் பிசைந்துவைத்துள்ள கறியை தூவி நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளையும் தூவவும்.

மீண்டும் அதன் மேல் மீதியுள்ள சீஸை எல்லா இடங்களையும் கவர் பண்ணுவது போல் தூவி, மிதமான சூட்டில் வேகவைத்து, வெட்டி எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

இதில் ஆட்டுக்கறிக்கு பதிலாக பீஃப், தூனா (டின்) மீன், ஓடு நீக்கிய நண்டு, வான்கோழி கறி, அவித்த முட்டை இவற்றில் ஏதாவது ஒன்றில் செய்யலாம். அல்லது சைவ முறையில் தேவைப்பட்டால் காளான், தக்காளி இவற்றை துண்டுகளாக்கி தூவலாம். குடை மிளகாய்க்கு பதிலாக ஆலிவ் காய், சிகப்பு வெங்காயத்தை பயன்படுத்தலாம். சாஸ் செய்யும்போது சிக்கன் க்யூபுக்கு பதிலாக சர்டீன் (டின்) மீனை சுத்தம் செய்து அதனுடன் சேர்க்கலாம். நாம் விரும்பும் சுவைக்கேற்றாற்போல் இப்படி பலவிதமாக செய்யலாம்.