தோசை
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 1 சுண்டு
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைதேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைதேக்கரண்டி
கருவப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு
நல்லெண்ணைய் - தேவையானளவு
முட்டை - 1(விரும்பினாள்)
உருளைக்கிழங்கு(சிறியது) - 1
வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1
செய்முறை:
ஒருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,தண்ணீர்ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம் ஊறவைக்கவும்.
மற்றையபாத்திரத்தில் வெந்தயம்,தண்ணீர்ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம் ஊறவைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் அரிசி,தண்ணீர் ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம் ஊறவைக்கவும்.
ஊறியவெந்தயம்,சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.
அரைத்த பின்பு அதனுடன் ஊறவைத்த அரிசி தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
பின்பு ஊறிய உளுத்தம்பருப்பு, தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு பொங்க பொங்க அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).
அரைத்த பின்பு அதை எடுத்து அரிசி,வெந்தயம் அரைத்து வைத்து உள்ள பாத்திரத்தில் போடவும்.
பின்பு கோதுமைமா(மைதாமா),தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நன்றாக கலக்கவும்(கட்டியில்லாமல்).
அரைத்த பின்பு அதை அரிசி,வெந்தயம்,உளுத்தம் பருப்பு அரைத்து வைத்து உள்ள பாத்திரத்தில் கலந்த கோதுமைமா(மைதாமா)போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.
அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு போட்டு கலக்கவும்.
பின்பு முட்டையை உடைத்து அதன் கோதை அகற்றிய பின்பு அதனை அப்படியே தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும்(தோசை சுவையாகவும் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லிருந்து எடுக்கும் போது இலகுவாக வந்து விடும்).
பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை ஊற்றி வைக்கவும்.
அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.
முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி உருளைகிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்மாட்டி)வைக்கவும்.
இதனை நல்லெண்ணையுள்ள தட்டில் வைக்கவும்(கிழங்கு எண்ணையில்படும்படி).
பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன்பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு சூடாக்கவும்.
சூடாக்கிய எண்ணையில் கடுகைபோட்டு வெடிக்கவிட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஓரளவு பொரிய விடவும்.
ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.
தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில் குத்திய கிழங்கினால் (கிழங்கினை எண்ணையில் நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து அதை தோசைக்கல்லில் தடவும்.
தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய மாவை )தோசையை வேகவிடவும்.
தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி போட்டு வேகவிடவும்.
தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இதே போல மற்றைய தோசைகளையும் சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்.
அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து அதனுடன் சம்பல் (துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்கறி(கிழங்கு,கத்தரிக்காய்,பீன்ஸ்)ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
எச்சரிக்கை - உழுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.
கவனிக்க வேண்டிய விசயங்கள் - தோசை குளிர்மையானது .
மாற்று முறை - அரிசி(பச்சையரிசி,குத்தரிசி இட்லி அரிசி,சம்பா, புலுங்கள் )எல்லா அரிசிகளையும் பாவிக்கலாம்.