துபாய் பூசணிக்காய் கறி
தேவையான பொருட்கள்:
துபாய் பூசணிக்காய் (பெரியது) - ஒன்று
நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)- அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - (2 - 3) மேசைக்கரண்டி
கறிவேப்பிலை(வெட்டியது) - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - அரைப்பாதி
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உள்ளி(பூண்டு வெட்டியது) - 2 பல்
இஞ்சி (விழுது) - சிறிதளவு
பால் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழச்சாறு) - சிறிதளவு
செய்முறை:
துபாய் பூசணிக்காயின் தேவையற்ற பகுதிகளை அகற்றி விட்டு அதனை இரு பலகையில் வைத்து ஓரளவு பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.
அதை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரிய விடவும்.
வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய உள்ளி(பூண்டு),இஞ்சி விழுது ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதனுடன் வெட்டி கழுவிய துபாய் பூசணிக்காய் துண்டுகளை அதில் போட்டு வதக்கவும்.
ஓரளவு வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.
பூசணிக்காய் ஓரளவு அவிந்ததும் அதனுடன் பால், கறிவேப்பிலை, உப்பு, அஜினோமோட்டோ ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் அவியவிடவும்.
பின்பு அதனுடன் தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழச்சாறு) விட்டு நன்றாக கலந்து சிறிது நேரத்தின் பின்பு சுவையான துபாய் பூசணிக்காய் கறி தயாராகி விடும்.
பின்பு துபாய் பூசணிக்காய் கறி உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்)பாண், இடியப்பம், பிட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் இக்கறியை வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
துபாய்பூசணிக்காய் கறி சுவையானது செய்வதற்கு இலகுவானது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு புரோட்டீன், வைட்டமின் A,B1,B2,B3,B5,B9,C9,E, மினரல், கரோட்டீன், கால்சியம், இரும்பு, மெக்னீஸியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகிய பல சத்துகள் அடங்கியது. கவனிக்க வேண்டிய விசயங்கள் - பூசணிக்காயை நன்றாக கரண்டியால் கலக்ககூடாது. கறியில் பூசணிகாய்த் துண்டுகள் ஓரளவு காணப்பட வேண்டும். நிறைய நேரம் அவிய விடக்கூடாது நிறைய பால் விடக்கூடாது. மாற்று முறை - நிறைய பால் விட்டு நன்றாக குழைந்த பதமாகவும் செய்யலாம் மிளகாய்த்தூள் மெட்ராஸ் கறித்தூள் போடாமலும் செய்யலாம். எச்சரிக்கை - பூசணிக்காய் அலர்ஜி உள்ளவர்கள், சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.