தாய் ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி (ஊறவைத்தது) - 250 கிராம்

பட்டர் - ஒரு தேக்கரண்டி

கோவா(முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்

காரட் (நறுக்கியது) - ஒரு கப்

கறிமிளகாய்(குடைமிளகாய்)நறுக்கியது - ஒரு கப்

வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்

தக்காளிப்பழம் (நறுக்கியது) - ஒரு கப்

வெங்காயத்தாள் - 2

பேபிக்கான் - 4

துளசி இலை - ஒரு கட்டு

இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி

உள்ளி(பூண்டு)நறுக்கியது - 8 பல்

பச்சைமிளகாய் நறுக்கியது - 10

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

அஜினோமோட்டோ - தேவையானளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்தகச்சான்(இரண்டாக உடைத்தது) - சிறிதளவு

கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு

தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - சிறிதளவு

செய்முறை:

பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் போட்டு வறுக்கவும்.

வறுத்த பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை (வாணலியை) இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால்பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.

அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.

அரிசிஅவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

இவையாவும் வதங்கியபின் இதனுடன் கறிமிளகாய்(குடைமிளகாய்), கோவா(முட்டைகோஸ்), காரட், துளசி யிலை ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

இவையாவும் வதங்கிய பின்பு இதனுடன் தக்காளிப்பழம், பேபிக்கானையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கிய பின்பு அஜினோமோட்டோ, மிளகுத்துள், கறிவேப்பிலை, தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு, பட்டர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடத்தின் பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

அதன் பின்பு வாயகன்ற பாத்திரத்தில் சோற்றையும்(சாதத்தையும்) வதக்கிய காய்கறிகளையும் மாறிமாறி போட்டு நன்றாக கலந்து அதன் மேல் வறுத்து இரண்டாக உடைத்த கச்சானை (வேர்கடலையை) போட்டு அலங்கரிக்கரித்த பின்பு சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ் தயாராகிவிடும். அதன் பின்பு அதை பரிமாறவும்.

குறிப்புகள்:

தாய் ஃப்ரைட்ரைஸ் சுவையானது நோய் எதிர்ப்புச் சக்திநிறைந்தது கார்போஹைட்ரேட், மினரல், கரோட்டீன், வைட்டமின் ஏ,பி,சி, பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, மக்னீசீயம் போன்ற பல சத்துகள் அடங்கியது, தாய்லாந்து மக்கள் விரும்பி உண்ணும் உணவாகும் இது மிக விரைவில் சமிபாடடைய கூடியது ஆகவே இதனை செய்து பார்த்து இதன் சுவையை அறிவதுடன் இதில் காணப்படும் சத்துகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

எச்சரிக்கை - இருதய நோயாளர், துளசிஇலை, பேபிக்கான், இஞ்சி, உள்ளி(பூண்டு), கச்சான் (வேர்கடலை) அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.